தினமும் க்ரீன் டீ குடிப்பவரா நீங்க? அப்ப கட்டாயம் இத படிங்க…

தற்போது பால் டீயை விட க்ரீன் டீ குடிப்போரின் எண்ணிக்கை தான் அதிகம். ஏனெனில் பல ஆய்வுகளில் க்ரீன் டீ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் தான்.

மக்களுள் பலர் அதிகப்படியான உடல் எடையால் கஷ்டப்படுகின்றனர். அதைக் குறைப்பதற்காகவே க்ரீன் டீயை தினமும் தவறாமல் குடிக்கின்றனர். எப்படி நாம் உண்ணும் உணவுகள் நமக்கு நன்மைகளை வாரி வழங்குகிறதோ, அதேப் போல் தீமையையும் கட்டாயம் வழங்கும்.

அதிலும் க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 1-2 கப்பிற்கு மேல் குடித்தால், அதனால் பல தொந்தரவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இங்கு க்ரீன் டீயை அதிகமாக குடிப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

மனப்பதற்றம் அதிகமாகும்

என்ன தான் க்ரீன் டீ ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அதில் காப்ஃபைன் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இதனை ஒரே நாளில் அதிகமான அளவில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் மனக்கலக்கம் மற்றும் பதற்றத்தை உண்டாக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ்

பொதுவாக க்ரீன் டீயில் உள்ள பொருட்கள் உடலில் கால்சியம் தங்குவதில் இடையூறை ஏற்படுத்தும். அதிலும் அதனை அதிகமான அளவில் குடித்தால், உடலில் உள்ள கால்சியமானது சிறுநீரின் வழியே வெளியேற்றப்பட்டு, அதனால் கால்சியம் குறைபாட்டை உண்டாக்கி, ஆஸ்டியோபோரோசிஸிற்கு வழிவகுக்கும். எனவே ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் க்ரீன் டீ குடிக்க வேண்டாம்.

கர்ப்பிணிகள் தவிர்க்கவும்

க்ரீன் டீ ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அதனை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பருகக்கூடாது. ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு க்ரீன் டீ கருச்சிதைவை உண்டாக்கும் வாய்ப்புள்ளது மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் தாய்ப்பாலில் காப்ஃபைன் அதிகம் கலந்து குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். எனவே இந்த பானத்தை இவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

இரும்புச்சத்து குறைபாடு

க்ரீன் டீ குடிப்பதால், உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். எனவே உங்களுக்கு ஏற்கனவே இரத்த சோகை இருப்பின் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். மேலும் க்ரீன் டீயினால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், க்ரீன் டீயில் 1 சிட்டிகை எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள்.

நச்சுத்தன்மை

பலர் விரதம் இருக்கும் போது அல்லது வெறும் வயிற்றில் க்ரீன் டீயை குடித்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அதிலிருந்து முழுமையாக கிடைக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் இதனை விரத நேரத்தில் அல்லது வெறும் வயிற்றில் குடிப்பதால், இரைப்பை, சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் நச்சுத்தன்மையை உண்டாக்கும் என ஆய்வு ஒன்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கல்லீரலுக்கு கேடு

க்ரீன் டீயில் கேட்டசின்கள் அதிகம் உள்ளது. கேட்டசின்களை அதிக அளவில் எடுத்தால், அதனால் உடலில் உள்ள செல்களின் சக்திபீடமான மைட்டோகாண்ட்ரியாவை தாக்குவதோடு, மெட்டபாலிசத்திலும் இடையூறை ஏற்படுத்தி, உணவில் இருந்து ஆற்றல் கிடைப்பதைத் தடுத்து, மஞ்சள் காமாலை, ஹெபடைட்டிஸ் அல்லது இன்னும் தீவிரமாக கல்லீரல் செயலிழப்பையும் ஏற்படுத்திவிடும். ஆகவே ஒரே நாளில் க்ரீன் டீயை அதிகம் பருகாதீர்கள்.

மருந்துகளை எடுப்பவர்கள் குடிக்கக்கூடாது

நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது அம்மருந்துகளின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, விரைவில் கல்லீரல் பாதிப்பை உண்டாக்கும். மீறி க்ரீன் டீயை குடித்தால், அதனால் வயிற்றுப் போக்கு, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் அளவு குறைதல் மற்றும் உடலினுள்ளே பலத்த காயத்தை உண்டாக்கி இரத்தக்கசிவு போன்றவற்றை உண்டாக்கும். எனவே நீங்கள் தினமும் மருந்துகளை எடுத்து வந்தால், க்ரீன் டீயைக் குடிக்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை ஏன், எழுப்ப கூடாது என்று சொல்லுவார்கள் தெரியுமா?