வெயிலுக்கு குளுகுளு டிப்ஸ்!

வெயில் காலம் வந்தாலே, பலருக்கு பாத எரிச்சல் வந்து விடும். குறிப்பாக நீரிழிவுக்காரர்களுக்கு! 2 டீஸ்பூன் சிவப்பு சந்தனத்துடன், சிறிது பன்னீரும், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் கலந்து, பாதத்தில் தடவிக் கொண்டு, கால்களை சற்று உயர்த்தி வைத்தபடி ஓய்வெடுத்தால், சூடும் தணியும். பாத எரிச்சலும் பறந்து போகும்.

கொஞ்சம் ரோஜா இதழ்களை இளநீர் விட்டு மையாக அரைக்கவும். அதை முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவ, வெயிலினால் வறண்டு போன சருமம் பளபளப்பாகும். சரும துவாரங்களும் மூடும்.

நுங்குத் தண்ணீரை, காய்ச்சாத பாலில் கலந்து, முகம், கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்க, குளுகுளுவென உணர்வீர்கள்.

‘அக்கி’ என்கிற கொப்புளம் வெயில் நாட்களில் சகஜம். கிராமங்களில் அக்கி வந்தால், உடனே காவியை எடுத்துத் தடவுவார்கள். காவி என்றால் கோலம் போட உபயோகிப்பது இல்லை. அக்கி காவி என்றே கடைகளில் கிடைக்கும். அதை விளக்கெண்ணெயில் குழைத்து, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தடவினால் அக்கி வராது. காவியின் நவீன வடிவம்தான் நாம் இன்று உபயோகிக்கிற கேலமைன் ஐபி லோஷன்.

ஆவாரம் பூவையும் கார்போக அரிசியையும் சம அளவு எடுத்துக் காய வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் 1 டீஸ்பூன் எடுத்து, அதில் பன்னீரும், காய்ச்சாத பாலும் கலந்து, முகத்திலும், கழுத்திலும் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், வெயில் பட்டுக் கருத்த இடங்கள் மாறும்.

எலுமிச்சம்பழ, ஆரஞ்சுப்பழத் தோல்களை வீணாக்காமல் சின்னச் சின்னதாக வெட்டி, வெயிலில் காய வைத்து, கொஞ்சம் கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் பன்னீர் விட்டுக் குழைத்து, முகத்துக்குத் தடவினால், முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கும்.

தினமும் 2 வேளைக் குளியல் அவசியம். குளிக்கிற தண்ணீரில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறும், 3 துளிகள் ரோஸ் ஆயிலும் கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் இருக்காது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா?